Tuesday, August 21, 2007

என் பேனாவின் பிதற்றல்கள்!

  1. நாமனைவரும் நாட்காட்டிகள், நாள் தோறும் கிழிக்கப்படுகிறோம்
  2. வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு
  3. இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்
  4. அறிதலினால் விளைவது புரிதல், புரிதலினால் விளைவது காதல்
  5. கசப்புகளின்றி சாகசம் இல்லை
  6. நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது! உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
  7. கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள் நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்
  8. இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே
  9. பூக்களைக்கொண்டு காலத்தைச் செதுக்குவது காதல்

Saturday, August 18, 2007

எனது பொன்மொழிகள்

  • பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
  • வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
  • புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்
  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்
  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு
  • வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
  • மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
  • மகானாய் இருக்கவேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
  • குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
  • இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்

சட்டமாக்குங்கள்

பெண்களின்
திருமண வயதை
இன்னும் கொஞ்சம்
அதிகப்படுத்துங்கள்!

குடிசையில் வாழும்
கோல மயில்களுக்கு
இங்கே மாதவிடாய் நின்றும்
மணமகன்கள் வரவில்லை!!

இவர்கள்
இராமன்
கால்படக் காத்திருந்த
அகலிகைகள் இல்லை
இராவணன்களுக்காகக்
காத்திருக்கிறார்கள்
கடத்தியாவது செல்வார்களென்று!!!

தயவு செய்து
பெண்களின்
திருமண வயதை
அதிகப்படுத்துங்கள்!

நட்பு

பூவின் மென்மையும்
கற்பின் வலிமையும்
சங்கமித்த உறவு…
வாலிபத்தின் அவசியம்!
வயோதிகத்தின் மூலதனம்!!

உழைப்பு

விடாமுயற்சியாளனின்
ஒவ்வொரு வியர்வைத்துளியும்
ஒரு விருட்சம்தான்!