Saturday, October 13, 2007

எனக்குள்ளும் காதல் உண்டு

இதுவரை
எவனையும்
ஏரெடுத்துப்பாராத
வெகுளித்தனமான அன்பு
வினயமுள்ள தாபம்
என்னைப் பகிர்ந்துகொடுக்காத பாசம்
வெறித்தனமான காதல்...

துன்பத்தில்
பங்குகொள்ளும் பக்குவம்
தலைகோதித் தூங்கவைக்கும் தாய்மை
எனைச் சார்ந்தோரையும் நேசிக்கும் பரிவு
அகங்காரமில்லாத ஊடல்
ஒரு ஆணவ அணைப்பு
நானில்லாமல் அவளின் தவிப்புகளை
அவளுக்குத் தெரியாமல்
நான் மறைந்திருந்து ரசிக்க!

ஒரே படுக்கையில் இருவர் கிடந்தாலும்
காதல் ஓங்க
அவள் உண்ண நான் பசியாற
கள்ளமில்லா வெள்ளைக்காதலியை
ஒரு வெகுளித்தனமான காதலியைக்
கைப்பிடிக்க எனக்கும் ஆசைதான்...

எங்கிருக்கிறாய்?
எப்படியிருக்கிறாய் என்னவளே?
நான் இதுவரை
உன்னைச் சந்தித்துவிட்டேனா? அல்லது
என்னைக் கடந்திருக்கிறாயா?
நீ எங்கிருந்தாலும்…!
உன்னை நான் காதலிக்கிறேன்!

கொஞ்சம் அழகானவன்

நான்
அழகானவன் அல்ல
எனக்கும் தெரியும் - ஆனால்
அன்பானவன்
உனக்குத் தெரியும்!

பார்த்தவுடன் மயக்குகிற
பளபளப்பு இல்லைதான்
பழகினால் விரும்புகிற
அழகு இருக்கிறது

முகம்
அடையாளத்திற்குத்தானே ஒழிய
அழகுக்கா?

ஆனாலும்...
தூரத்தில் கொஞ்சம் அழகானவன்
அருகில் அதிக அன்பானவன்

என்னை நீ
தூரத்தில் பார்
அருகில் வை..